அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ.1 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் மிகவும் பிரபலம். இவை சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் பெண் குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவிகள் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் அமைந்துள்ள இப்பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் அனாமிகா சுக்லா.

மெயின்புரி நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியில் முழு நேர ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மாத சம்பளமாக இப்பள்ளியில் 30 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டிருக்கிறார். ஆனால் அனாமிகா சுக்லா பற்றி சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏனெனில் இவரது பெயர் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியின் பல்வேறு கிளைகளில் உள்ள பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருந்து சம்பளம் பெற்று மாதம் 1 கோடி ரூபாய் அளவிற்கு சம்பாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி கடந்த 13 மாதங்களாக தொடர்ந்து வந்துள்ளது. ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் அனாமிகாவின் விவகாரம் வெளியே தெரியவில்லை.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தும் ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளம் மூலம் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில் அம்பேத் நகர், பாக்பத், அலிகார், சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 25 பள்ளிகளில் அனாமிகா சுக்லாவின் பெயர் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இப்பள்ளிகளில் இருந்து மாத சம்பளம் பெறப்பட்டதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க: ஏழை மக்களின் நல்லெண்ண ஐ.நா. தூதராக 13 வயது மதுரை பெண்

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக மாநில பள்ளி கல்வி இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது மிகப்பெரிய மோசடி. உண்மையை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவருக்கு இத்தனை பள்ளிகளில் இருந்து மாதந்தோறும் 1 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளம் வந்தால் உடனே துறை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுபற்றி தெரிவிக்காமல் மறைத்துள்ளார். மேலும் 25 பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் தனது வருகையையும் பதிவு செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

அனாமிகா ஒரே வங்கிக் கணக்கை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி அதில் சம்பளம் பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியை அனாமிகாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பேசிய உத்தரப் பிரதேச கல்வி அமைச்சர் சதீஷ் திவேதி, “ஆசிரியை அனாமிகா விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அவர் தவறு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அதிகாரிகளுக்கு தொடர்பிருந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.