தமிழகம் முழுவம் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக இரட்டை குழந்தைகள் உள்பட 17 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இந்நிலையில் டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல் போன்றவற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பது திருவள்ளூர் மாவட்டம் தான். முறையான பாதாள சாக்டை, கழிநீர் குட்டைகள், கால்வாய் பராமரிப்பில் கோட்டை விடுவது மற்றும் அதிக கிராமங்கள் அதிக பகுதியாக இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் மேற்கண்ட நோய்களின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. எனினும் அரசு இந்த மாவட்டத்தின் மீது முழுகவனமும் செலுத்தாமல் இருப்பதே நோய்கள் வேகமாக பரவ காரணமாக மாறிவிடுகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைக்கு காய்ச்சல் என்றாலே சிகிச்சை பெற தினசரி ஏராளமானோர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்ததில், 17 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. இதில், 12 பேருக்கு தட்டணுக்கள் மிகவும் குறைவாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட புச்சிரெட்டிப்பள்ளி குணசேகர் மகன் ஜெகதீசன் (17), விளாப்பாக்கம் பெருமாள் மகன் பொன்னுரங்கம் (30), திருவள்ளூர் ராஜாஜிபுரம் மரியதாஸ் மகன் நிஷாந்த் (8), செம்பேடு ராஜேந்திரன் மகன் ரமேஷ் (27), சிற்றம்பாக்கம் சங்கர் மகள் காயத்ரி (18) ஆகிய 5 பேருக்கு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தற்போது குழந்தைகளுக்கான காய்ச்சல் வார்டில், 2 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 15 பேர், சிறுமிகள் 21 பேர் மர்ம காய்ச்சலால் சிகிச்சையில் உள்ளனர். மேலும், பெண்கள் வார்டில் 26 பேரும், ஆண்கள் வார்டில் 43 பேரும் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு மொத்தம் 105 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், பலருக்கு டெங்கு அறிகுறிகள் இருந்தும், என்ன காய்ச்சல் என மருத்துவர்கள் கூற மறுக்கின்றனர்.

டெங்கு அறிகுறிகள்
* கடும் காய்ச்சல்
* தலை வலி
* தாங்க முடியாத மூட்டு, தசை வலி
* தோலில் சிவப்பு நிறத்தில் திட்டு
* மூக்கு, வாய், ஆசன வாய் வழியாக ரத்தம் கசிவது
* ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தற்போது காய்ச்சலுக்கென தனி வார்டு உள்ளது. இதில், டெங்கு, வைரஸ் நோய் பாதிப்பு உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பன்றிக்காய்ச்சல் பீதியில், அதற்கான அறிகுறி உள்ளவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

அவர்களையும் அதே வார்டில் அனுமதித்தால், அவர்கள் இருமும்போதோ, தும்மும்போதோ வெளியேறும் கிருமிகளால் மற்றவர்களுக்கு பன்றி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக சிறப்பு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருத்தணி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கவியரசு (19). சிவராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி மகள் தர்ஷினி (13). இவர்கள் இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டெங்கு பாதிப்பு இருப்பதை அடுத்து இவர்களுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.