லோக் ஆயுக்தாவின் தலைவர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம் லோக் ஆயுக்தா அமைக்க விருப்பமில்லையா என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கவனித்து வருகிறோம். லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா., கால தாமதம் செய்வதையே தமிழக அரசு விரும்புகிறதா., என்றும் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தொடரப்பட்ட பொது நல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மதியம் 2 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.