அரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக

‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி

‘பேரழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தமிழகத்தைக் காப்பாற்றி, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல் இது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்சியில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து இலட்சியப் பிரகடனத்தை ‘தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்’ என்ற பிரமாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு. தேர்தலில் போட்டியிட திமுக முதல் முறையாக முடிவு செய்த இடம் தான் திருச்சி மாநகரம். திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது; அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய 7 முக்கிய உறுதிமொழிகளை அறிவித்தார்.

குடிமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்வோம்.

வீணாகும் தண்ணீர் சதவிகிதத்தை குறைப்போம்.

பசுமை பரப்பளவை 25 % உயர்த்துவோம்.

வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு,

மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி,

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்,

அனைவருக்கும் உயர்நிலை கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எழில்மிகு மாநகரங்களின் மாநிலமாக தமிழகம் திகழும்.

உயர்தர ஊரக கட்டமைப்பு உயர்ந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்படும்.

அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் அமைப்போம்.

தமிழகத்தில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உருவாக்கப்படும்.

குறிப்பாக, ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க உத்தரவு- தேர்தல் ஆணையம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.