தமிழக அரசால் ரூ.79 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி 27 காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

இதனைத்தொடர்ந்து, 50, 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினர்.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஓளி தகடுகள் பதிக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பீனிக்ஸ் நினைவு மண்டபத்திற்கு பின்புறம் மியாவாக்கி தோட்டமும், நுழைவுவாயில் தடாகத்தின் அருகில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நினைவிடத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக 265 மீட்டர் நீளம் மற்றும் 9 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், பொது ஒலி அமைப்பு, அணையா விளக்கு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்க ரூ.12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு ரூ.9 கோடி நிதியும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது.

முன்னதாக, ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி மாணவிகள் கட்டாயம் வர வேண்டும் என அதிமுக அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. அதன்படி, காயிதே மில்லத், ராணி மேரி, பாரதி கல்லூரி பேராசியர்களுக்கு அவர்கள் கல்லூரிகள் சார்பில் காணொலி மூலம் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, 27 ஆம் தேதியன்று கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிமுக கரை கொண்ட வேட்டி, சேலை கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும், அதற்கான உடைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவ மாணவியர்களை அதிமுக ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தும் செயலுக்கு கல்வியாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா நினைவிடத்திற்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு நிதி ரூ.22.83 கோடி அபேஸ்…