வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்ததற்கான தரவுகள் இல்லை என்று ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (1.12.2021) நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா, விவாதம் எதுவும் இன்றி இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரண்டு நாட்களாக அவையில் இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இன்றும் விவசாயிகள் போராட்டம் குறித்தும், வேளாண் சட்டம் நீக்கம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று மக்களவையில், கடந்த ஆண்டு முதல் போராட்டத்தின்போது சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக போராட்டத்தை முன்னெடுத்த விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் கூட்டத் தொடரில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

இதற்கு ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவையில் கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில், விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை. போராட்டத்தின்போது, விவசாயிகள் மீதான வழக்குகள் அல்லது உயிரிழந்தவர்களின் விவரம் தொடர்பான தரவு அரசிடம் இல்லை. அதனால், அவர்களுக்கு இழப்பீடும் வழங்க முடியாது.

விவசாயிகள் யாரும் பலியாகாத காரணத்தால் அதை பற்றி இப்போது அவையில் கேள்வி எழுப்ப வேண்டியது இல்லை. இப்போது விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன என்று வேளாண்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து வேளாண் சட்டம் வாபஸ் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல் மாநிலங்கவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்பிக்கள் அமளி செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.