மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1 ஆம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதில் பெண்கள் 50 பேர், இஸ்லாமியர்கள் 42 பேர், தாழ்த்தப்பட்ட சமுகத்தில் 79 பேர், பழங்குடியினர் 17 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 80 வயதிற்கு அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என பல அதிரடியான விஷயங்களை வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது மம்தா பாணர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தூரம் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி சிலரால் தள்ளிவிடப்பட்டுள்ளார்.

இதில் கீழே விழுந்த மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரின் பின்சீட்டில் உட்காரவைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மம்தா பானர்ஜி, “நான் காரில் ஏற முயன்றபோது என்னை நான்கைந்து பேர் சேர்ந்து தள்ளிவிட்டனர்.

எனது காலைப் பாருங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல். நிச்சயமாக இதில் சதி இருக்கிறது. என்னைச் சுற்றி திடீரென்று காவலர்கள் யாருமே இல்லை” என்றார்.

அதன்பின்னர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். மாநில ஆளுநர் ஜெகதீப் தங்காரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார். இதனால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க உத்தரவு- தேர்தல் ஆணையம்