கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு சென்னைக்கு வரவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளுக்கு என மொத்தம் 6 குழுக்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொண்டது மத்திய அரசு.

கொரோனா பாதித்த மாவட்டங்களில் நிலைமை, ஊரடங்குகின் தாக்கம் ஆகியவை குறித்து இந்த குழு ஆய்வு செய்தது என தெரிவித்தது மத்திய அரசு. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர் பகுதிகளில் ஒரு குழுவும், ஜல்பைகுரி, டார்ஜிலிங், கலிம்போங் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் வாசிக்க: கன்டெயினர் லாரியில் பிடிபட்ட ராஜஸ்தான் இளைஞர்கள்

முன்னதாக, மேலாண்மை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள் ஆய்வு செய்ய, மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகள் உள்பட நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருந்தார்

மேலும் மத்திய குழுவை அனுப்பி வைத்தது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக அம்மாநில ஆளுநருக்கும் மம்தாவுக்கும் இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மேலும் 4 குழுக்களை மத்திய அரசு அனுப்பி, தமிழகம், தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.