மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளது. ஆலையில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசு முழுமையாக பொறுப்பேற்கும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதை கட்டுப்படுத்த பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட மே 28ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.

பின்னர் தருண் அகர்வால் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 15ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் வைகோ தரப்பில் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த ஆண்டு மே 28ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 5 வருடத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தேவையான அனுமதி, உரிமம், சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய பசுமை பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதிடும்போது, நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவு கொட்டப்பட்ட இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. அதையும் கருத்தில் கொள்ளவில்லை. கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க கழிவு கொட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரே நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் இந்த விதிமுறைகளை மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிசீலிக்காமல் மின் இணைப்புகளை துண்டித்து ஆலைக்கு சீல் வைத்துள்ளது. அபாயகரமான கழிவு மேலாண்மையை தூத்துக்குடியில் உள்ள அனல் மின்நிலையம் உள்பட 7 தொழிற்சாலைகள் பின்பற்றவில்லை.

அனல் மின் நிலையம் 7 சதவீத சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றுகிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 1 சதவீதம் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. நாட்டின் தாமிர தேவையில் 38 சதவீதம் பூர்த்தி செய்யும் இந்த ஆலையில் 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

அரசுக்கு 2 ஆயிரம் கோடி வரி வருவாயாக செலுத்தப்படுகிறது. தமிழக அரசிடம் போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையில் பாதிப்புகள் ஏற்பட்டால் கண்காணிக்க முடியாது.

அதனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தற்காலிகமாக நிர்வாகப் பணிகளை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் சராமாரியாக கேட்ட கேள்விகளின் விவரம் :

நீதிபதிகள்: தற்போது ஆலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நீதிபதிகள்: பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய எடுத்த நடவடிக்கை என்ன?
அட்வகேட் ஜெனரல்: துணை ஆட்சியர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனரக இணை இயக்குனர் அடங்கிய மாவட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அபாயகரமான கழிவுகள் மேலாண்மையை மேற்பார்வையிடும்.

நீதிபதிகள்: ஆலையை பராமரிக்க போதுமான நிபுணத்துவம் அரசிடம் உள்ளதா?
அட்வகேட் ஜெனரல்: அரசிடம் போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

நீதிபதிகள்: ஆலையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
அட்வகேட் ஜெனரல்: பாதிப்புகள் ஏற்பட்டால் தமிழக அரசு முழுமையாக பொறுப்பேற்கும்.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவாக ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட முடியாது. அப்படி உத்தரவிட்டு அதனால் சிக்கல் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்க முடியும்.
தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழக காவல்துறை இயக்குநர் ஆகியோர் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.