டெல்லியில் கொரோனா வைரஸ் சோதனை செய்வதற்காக காத்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நூற்றுக்கணக்கானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கு முன்பு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்வதற்காக லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். அப்போது கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினியை தெளித்துள்ளார்.

ஏற்கெனவே இப்படித்தான் கடந்த மார்ச் மாதம் பரேலி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பி வந்தபோது, ஒரு பஸ் ஸ்டாண்ட் அருகே அவர்களை அதிகாரிகள் உட்கார வைத்து கிருமிநாசினி தெளித்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் வாசிக்க: கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா அழியுமா.. விளக்கமளிக்கும் WHO

இப்போதும் அதேபோல மனிதர்கள் என்றுகூட பார்க்காமல் கிருமிநாசினியை முகத்திலேயே பீய்ச்சி அடித்துள்ளனர். இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த பள்ளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் அங்கு தெருக்களிலும், வளாகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர். அதன் காரணமாக அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்போது, சிறிது நேரம் இயந்திரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை ஊழியரால் சமாளிக்க முடியாமல் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இனிமேல் அந்த பணிகளை மேற்கொள்ளும் போது மிக கவனமாக இருக்குமாறு அந்த ஊழியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி புலம்பெயர் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.