ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி சீன நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரூ.5,400 கோடியை செலுத்த வேண்டும் என்று இங்கிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டில் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் சீனாவின் மூன்று வங்கிகளிடம் 700 மில்லியன் டாலர் கடன் வாங்கி உள்ளது.

இக்கடனை அனில் அம்பானி செலுத்தத் தவறியதால் அவருக்குக் கடன் வழங்கிய இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா, சீனா டெவலெப்மெண்ட் பேங்க் மற்றும் எக்ஸிம் பேங்க் ஆஃப் சீனா ஆகிய மூன்று வங்கிகளும் அனில் அம்பானி மீது வழக்கு தொடர்ந்திருந்தன.

மேலும் வாசிக்க: கொரோனா பாதிப்பிலும் அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது பெருமிதம்- அதிரவைத்த ட்ரம்ப்

இந்த கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் கொடுத்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கு, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், கடனுக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சீன வங்கிகளிடம் பெற்ற 717 மில்லியன் டாலர் தொகையை 21 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர், கடனுக்கு அனில் அம்பானி உத்தரவாதம் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் இங்கிலாந்து நீதிமன்ற தீர்ப்பு அனில் அம்பானியை கட்டுப்படுத்தாது என்றும் ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் எரிசக்தி மற்றும் ரிலையன்ஸ் முதலீடு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.