தமிழ்நாட்டில் 8 லட்சம் மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முதன்முறையாக தசம ஸ்தானத்தில் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களில் யாரும் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கடந்த கல்வியாண்டு முடிந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கடந்த 2020-21 கல்வியாண்டில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்பட மற்ற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மேலும், மாணவர்களின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணானது, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 50%, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இருந்து 20%, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் 30% என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மதிப்பெண் கணக்கீட்டுப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 8.16 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “முதல்முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளன. 551 முதல் 600 வரை 39,679 மாணவர்களும், 501- 550 வரை 1,67,133 மாணவர்களும், 451- 500 வரை 2,22,522 மாணவர்களும் 401 முதல் 450 வரை 2,08,015 மாணவர்களும் 351 முதல் 400 வரை 1,19,579 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

மாணவ-மாணவியர் யாரும் 600- 600 மதிப்பெண்களை பெறவில்லை. 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 4,35,973 மாணவிகளும், 3,80,500 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற் பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வகுப்புக்கு வராத 39,000 தனித்தேர்வர்களும் தேர்ச்சியடையவில்லை. மதிப்பெண்ணில் திருப்தி இல்லாவிட்டால், 12 ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் எழுதலாம். அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்களுக்கு பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் வருகிற 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் இணையதளங்களில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு- தமிழ்நாடு அரசு