நடிகை ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு என நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில், ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சையில் படபிடிப்பிற்காக சென்றபோது, பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு முன்பே போயிருக்கிறேன். உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போல நன்கு பராமரிக்கிறார்கள்.

ஆனால் அடுத்த நாள் மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படவில்லை. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோயிலுக்கு செல்லவில்லை.

எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள். கோயில் உண்டியலில் அவ்வளவு காசு போடுகிறீர்கள். அதேபோல் மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம் என்று கூறியுள்ளார்.

ஜோதிகாவின் இந்த பேச்சை பதிவிட்டு கண்டனம் தெரிவித்திருக்கும் நடிகர் எஸ்.வி.சேகர், “ஜோதிகாவின் பேச்சு 100% முதிர்ச்சியற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: ஊரே ஒன்று கூடி மலர்கள் தூவி வரவேற்பு- சர்ச்சைக்குள்ளான நடிகை ரோஜா எம்.எல்.ஏ.