மகாராஷ்டிரா பால்கரில் சாமியார்கள் இருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, இத்தாலிய சோனியா எனக் குறிப்பிட்டு அவதூறாக பேசிய ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் குழந்தை திருடும் கும்பல் என கருதி ஓட்டுநர் மற்றும் 2 சாமியார்களையும் உள்ளூர் மக்கள் அடித்து படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் எந்த மத பின்னணியும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்திருந்தார்.

ஆனாலும் பால்கர் படுகொலையை இந்துத்துவா ஆதரவாளர்கள் தொடர்ந்து விவாதம் செய்து, இஸ்லாமியர்கள் தான் இதற்கு காரணமென பொய் வதந்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, ரிபப்ளிக் டிவியில் அதன் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி விவாதம் நடத்தினார்.

அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இச்சம்பவத்தில் தொடர்புபடுத்தி அர்னாப் கோஸ்வாமி விமர்சித்தார். இத்தாலிய சோனியா என்றும் சுட்டிக்காட்டி பேசியது, காங்கிரஸ் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் #ArrestAntiIndiaArnab என்ற ஹேஷ்டேக் வைரலாகி, டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது.

இதனிடையே மகாராஷ்டிரா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர், அர்னாப் கோஸ்வாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது காவல் துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, பால்கரில் 2 சாமியார்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதம் சார்ந்த பிரச்சனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இதில் இந்து-இஸ்லாமியர்களுக்கான பிரச்சினை இல்லை. எனவே இது வகுப்புவாத பிரச்சனையும் இல்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், சிலர் இதனை அரசியலாக்க முயல்கின்றனர். இது அதற்கான நேரம் அல்ல. நாம் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக ஓரணியில் நின்று எதிர்த்துப் போராட வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பரப்பினால் விசா ரத்து, கைது- எச்சரிக்கப்படும் இந்திய வெளிநாட்டவர்கள்

இந்நிலையில், பால்கர் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் அம்மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.