ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் பொதுசெயலாளர் சசிகலா, ஒரே அணியில் ஒற்றுமையாக நின்று அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெல்ல வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (5.12.2021) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் பொது செயலாளர் வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதோடு ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து அனைத்து தேர்தல்களையும் வெல்ல வேண்டும் என கண்கலங்கி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதுபோன்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் தனது ஆதர்வாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி உட்பட பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதேபோல் மற்றொருபுறம் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செய்தபின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் அரங்கேறும் குழப்பங்களும் பிரச்சனைகளும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இரட்டை தலைமை கீழ் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்று கட்சி தலைவர்கள் கூறினாலும், ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையால் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

விடுதலைக்கு பின் சசிகலா, அமைதியாக இருந்தாலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், சசிகலா அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் அரசியலில் ரீ எண்ட்ரீ கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்மாவட்டங்களில் அரசியல் சுற்று பயணமும் மேற்கொண்டார்.

இந்நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், தீடீரென அதிமுக தேர்தல் விதிகளில் மாற்றம் கொண்டுவந்து, அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு வாங்க வந்த வடசென்னை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகி ஓமப்பொடி பிரசாத் சிங், கட்சியிலிந்து நீக்கம் செய்யப்பட்ட புகழேந்தி ஆதரவாளர்களுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே மோதம் உருவானது.

பின்னர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

முன்னதாக நேற்று (4.12.2021) சசிகலா வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக‌ தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌, ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌ நம்‌ இரும்பெரும்‌ தலைவர்களின்‌ தலைமையில்‌ செயல்பட்டு வந்தது.

நாட்டில்‌ உள்ள அனைத்து அரசியல்‌ கட்சியினரும்‌ பார்த்து பொறாமை படும்‌ அளவுக்கு ஒளிர்ந்த நம்‌ இயக்கத்தின்‌ இன்றைய நிகழ்வுகளைப்‌ பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்‌ வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்‌கிறது. மேலும் தொண்டர்கள்‌ மீது விழும்‌ ஒவ்வொரு அடியும்‌ ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின்‌ மீது விழுந்த அடியாகவும்‌, என்‌ மீது விழுந்த அடியாகவும் தான்‌ நான்‌ நினைக்கிறன்‌.

ஒரு தலைமையால் தான்‌ அந்த வலியை உணரமுடியும்‌. ஆணிவேரான தொண்டர்கள்‌ இருந்தால்தான்‌ இந்த இயக்கம்‌ ஆலமரமாக தழைத்தோங்கும்‌. இதை ஒவ்வொருவரும்‌ மனதில்‌ வைத்து, நம்‌ தலைவர்கள்‌ காட்டிய வழியில்‌, ஒற்றுமையுடன்‌ இருந்தால்‌ தான்‌ வரும்‌ நாட்களில்‌, நம்‌ எதிரிகளை வெல்ல முடியும்” ” என்று குறிப்பிட்டிருந்தார்.