உலக டூர் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஆன் சீ யங்கிடம் தோல்வி அடைந்து பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பேட்மிண்டன் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தென்கொரிய வீராங்கனை ஆன் சீ யங் இருவரும் மோதினர்.

நடப்பு உலக சாம்பியனான சிந்து, உலகின் ஆறாவது இடத்தில் உள்ள கொரிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினார். இறுதியில் பி.வி.சிந்து 16-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தார். இதனால் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆன் சீ யங் கொரியாவை சேர்ந்த 19 வயதே ஆகும் இளம் வீராங்கனை ஆவார். பேட்மிண்டனின் வருங்கால சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இந்தோனேஷியா மாஸ்டர், இந்தோனேஷியா ஓபன் என இரண்டு தொடர்களையும் வென்றிருந்தார். சிந்துவுக்கு எதிராக இறுதிப்போட்டியை வென்றதன் மூலம் கடந்த மூன்று வாரத்தில், மூன்று தொடர்களை வென்று அசத்தியுள்ளார்.

இந்த இறுதிப் போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆன் சீ யங்கே ஆதிக்கம் செலுத்தினார். நெட் ப்ளே, இன் & அவுட், பேக்ஹேண்ட் ஷாட்ஸ் என பல விதத்திலும் ஆன் சீயிடம் சிந்து தடுமாறிப்போனார். ஆன் சீ க்ராஸ் கோர்டாக அடித்த சில ஷாட்களை ரிட்டர்ன் செய்வதற்கு கூட சிந்து பெரிதாக முயற்சிகள் செய்யவில்லை.

ஆனால், ஆன் சீ யங் தனது சிறப்பான ஆட்டத்தால் முன்னேறி மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக ஆடிய ஆன் சீ யங் சிரமமேயின்றி இரண்டாவது செட்டையும் 21-12 என எளிதில் வென்றார்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேர் செட் கணக்கில் வீழ்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜப்பான் வீராங்கனை நவோமி ஓகுகராவை வீழ்த்தி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு, இந்த இரண்டு ஆண்டுகளில் பல தொடர்களில் நாக் அவுட் வரை முன்னேறி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். சிந்து விரைவில் தனது ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.