ஜம்மு- காஷ்மீரில், ஹன்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் வடக்கில் குப்லாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். சனிக்கிழமை மாலை 3.30 முதல் சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 21-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் கர்னல் அஸுதோஷ் ஷர்மா, மேஜர் ஜெனரல், இரு ராணுவ வீரர்கள், மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்ததாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்களும் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க: கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும் CRPF பட்டாலியன் படை வீரர்கள்

இந்த சம்பவத்தில் உயிரிழந்த கமான்டிங் அதிகாரியான கர்னல் அஸுதோஷ் ஷர்மா, இதற்கு முன்பு பல வெற்றிகரமான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவும், பல பொது மக்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக இரு கேலண்டரி விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் மோதலில் வீரமரணம் அடைந்த கர்னல் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.