மத்திய பிரதேச மாநிலம் போபால் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நேற்று (08-11-2021) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் உள்ள குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை மையத்தில் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு 9.10 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து குறித்து அறிந்த மத்திய பிரதேச மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

தீ விபத்து காரணமாகவும், புகையில் மூச்சுத் திணறியும் 4 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். இன்னும் சில குழந்தைகளுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 3 குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதேபோல் 4 பெண்களும் தீ காரணமாக காயம் அடைந்துள்ளனர்.

3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் 1 குழந்தை சிகிச்சை பலனின்றி அதிகாலையில் பலியானது. மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மத்திய பிரதேசத்தை உலுக்கி உள்ளது.