பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹரியானா காவல்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சில மணி நேரத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். கடந்த ஜூன் 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர்.

அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து யுவராஜ் சிங் அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து யுவரான் சிங் தனது ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

அதில், “நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தி விட்டேன். ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஹரியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில், யுவராஜ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் யுவராஜ் சிங் ஏற்கெனவே மன்னிப்பு கோரியிருந்ததால், சில மணி நேரத்தில் அவர் ஜாமினில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.