அதிமுக அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பத்திரிகையாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் பொதுமக்களுக்கு தனது புகைப்படத்துடன் கூடிய ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்’ என்ற பெயரில் பரிசு பையை வழங்கினார்.

இதில் பித்தளை பொங்கல் பானை, கரண்டி, பச்சரிசி, வெள்ளம், பாசிபருப்பு, நெய் மற்றும் பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் இடம் பெற்று இருந்தன.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்’ பரிசுத் தொகுப்பு குறித்து சன் டிவி நிறுவனத்தின் செய்தித் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டதற்காக சன் டிவி மீது தனது வெறுப்பைக் காட்டும் நோக்கில், இன்று (ஜனவரி 13) செய்தியாளர்கள் சந்திப்பில் சன் டிவி மைக் இருந்தால் பேட்டி அளிக்கமாட்டேன் என தெரிவித்ததுடன், சன் நியூஸ் மைக்கை தூக்கி எறிந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அதிமுக அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது.

ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான். மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்! அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு- மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.