உடல்நிலை காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2017 டிசம்பரில், நான் அரசியலுக்கு வருவேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து 3 ஆண்டுகள் எந்த ஒரு கல்லையும் நகர்த்தாமல் இருந்த ரஜினிகாந்த், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி தனது ட்விட்டர் மூலம், 2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார்.

மேலும் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதிமதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” எனத் தெரிவித்திருந்தார்.

டிசம்பரில் தேதி அறிவித்து, ஜனவரியில் கட்சி துவக்கம்- நடிகர் ரஜினி

இந்நிலையில் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்றிக்காக ஹைதராபாத் சென்ற ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த், குணமடைந்து வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ரஜினி தனது ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

[su_image_carousel source=”media: 20750,20749,20748″ crop=”none” captions=”yes” autoplay=”3″]

உடல்நலம் பாதிப்பு காரணமாக, நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்” என்று கூறியுள்ளார்.

வாடகை பிரச்சனையில் லதா ரஜினிக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை