பொருளாதாரத்தில் பின்தங்கிய அதாவது ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் உள்ள உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1980களின் இறுதியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை (OBC) சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. அதன்படி இட ஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிய பாஜக அரசு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உயர் சாதி என்று கூறப்படும் பிரிவில் உள்ள ஆண்டிற்கு ரூ.8 லட்சம் மட்டுமே வருமானம் பெரும் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்தது.

இதனையடுத்து ஒன்றிய அரசின் உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. திமுகவும் இந்த வழக்கில் இணைந்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமைநீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வில்சன் எம்.பி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறது ஒன்றிய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதரணமான சூழலாகும்?

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வகுப்பாக எப்படி வகைப்படுத்த முடியும்? இதனை இந்திரா சஹானி தீர்ப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டதும் கிடையாது. இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு.

தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக ஒன்றிய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு ஒன்றிய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக ஒன்றிய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல என வாதிட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்து வந்த அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (07.11.2022) உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில், நான்கு விதமான தீர்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்தார். 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.

தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். அதிகபட்ச நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு செல்லும் என்று தெரிவித்துள்ளால், அந்த தீர்ப்பு அமலாகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு இந்திய மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.