ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் மூலம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

இந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ள இளையராஜா, மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்.

நாட்டில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், முத்தலாக் சட்டம் மூலம் பெண்களை முன்னேற்றி இருக்கிறார் மோடி என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நெட்டிசன்கள் என பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதே சமயம் பாஜக தலைவர்கள் இளையராஜாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே ‘அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது’ என்று இளையராஜா தெரிவித்ததாக அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் புதிய தலைமுறைக்கு பேசியபோது, “இளையராஜாவிடம் பேசினேன். அப்போது ‘எனக்கு கருத்து சொல்ல சுதந்திரம் உள்ளது. மோடியை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதை நான் கூறியுள்ளேன். ஒரு புத்தகத்தை கொடுத்து என்னிடம் முன்னுரை எழுத சொன்னார்கள். நான் ரெண்டு பேரையும் அலசி ஆராய்ந்து என்னுடைய எண்ணத்தை எழுதினேன்.

இதற்காக நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் பாஜக சேர்ந்தவன் இல்லை. எனக்கு மோடியையும் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால் இரண்டு பேரையும் ஒப்பிட்டு எனது கருத்தைத் தெரிவித்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதையெல்லாம் மோடி செய்து வருகிறார். அதை நான் கூறியது தவறா?

என்னுடைய எண்ணத்தில் மோடி எப்படி இருக்கிறாரோ, அதுவே என் பேச்சில் வந்துள்ளது. பதவி வாங்குவதற்காகவெல்லாம் நான் மோடியை வேண்டுமென்று புகழ்ந்து பேசவில்லை. சொல்லப்போனால் எனக்கு அப்படியான எந்தப் பதவியும் தேவையில்லை. நான் கட்சிக்காரணும் இல்லை. தனிப்பட்ட முறையில் மோடியை எனக்கு பிடிக்கும்… அவ்வளவுதான்’ என்று இளையராஜா என்னிடம் கூறினார்” என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராவது உறுதி என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக மாலைமுரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், மாநிலங்களவைக்கு 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். பொருளாதாரம், இலக்கியம், ஊடகம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்கள் இவ்வாறு நியமிக்கப்படுவார்கள்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியின் எம்பி பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. அவர் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை. இப்பின்னணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாலைமுரசு செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு புகழ்ந்த இளையராஜா குறித்து சவெராவின் கருத்துக்கள்:

நீராரும் கடலுடுத்த தமிழ்த்தாய் வாழ்த்து மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களை கலைஞர் தலைமையிலான திமுகவின் தமிழ்நாடு அரசு 1970 களில் இசை அமைக்க உத்தரவிட்டது போல..

செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற மணம் கமழும் தமிழ் உணர்வுள்ள பாட்டுக்கு தமிழ்நாடு அரசின் செம்மொழி மாநாட்டுக்கு.. இளையராஜாவை தனது வாயால் இசைஞானி பட்டம் கொடுத்து பாராட்டிய கலைஞர்..

திமுகவின் தமிழ்நாடு அரசை 2010 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏன் பயன்படுத்த உத்தரவிடவில்லை என்ற ஆதங்கம் பல நாள் உண்டு.. இன்னும் உண்மையாக உடைத்து சொல்ல வேண்டும் என்றால் கலைஞர் மீது வருத்தமும் பலநாள் இருந்ததும் உண்டு..

இதே அளவிலான வருத்தம் பெரியார் திரைப் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என உறுதியுடன் மறுத்த போது இளையராஜா மீது வந்ததும் உண்டு..

இப்போது பாஜகவின் எம்பியாக என்றும் மற்றும் பத்ம உள்ளிட்ட ஒன்றிய அரசு உயர் விருதுகளுக்கு ஆசைப்பட்டு தான்..

மோடியை அம்பேத்கர் அளவுக்கு சங்கியாக மாறி சிங்கியாகி குட்டிக்கரணம் அடிக்கும் அளவுக்கு தாரை தப்பட்டைகளை.. காதுகள் கிழியும் அளவுக்கு ஊத தொடங்கி யுள்ளார் இளையராஜா என்ற செய்திகளை எல்லாம் வாசிக்கும் போது..

வருத்தங்கள் மறைந்து கலைஞர் கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி என அவர் மீது உள்ள அபிமானம் மேலும் பெருகி வருவதை தவிர்க்க முடியவில்லை என உணர்வதையும் உளமார உணர முடிகிறது..

சமூக வலைத்தளத்தில் காண: https://www.facebook.com/savenra/posts/8247401738619010