ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி கிராமத்தில் நெமிலி பஞ்சாயத்துக்கு சொந்தமான அரசு நிலங்களின் மீது மோசடியாக உரிமை கோரிய பல்வேறு நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை, இழப்பீடாக சுமார் 300 கோடி ரூபாய் வழங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை- பெங்களூரு இடையே ‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ விரைவு சாலை அமைக்க, ஸ்ரீபெரும்புதூர் அருகே பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை- பெங்களூரு இடையே விரைவு சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 5.1 ஏக்கர் நிலங்கள், 1992 ஆம் ஆண்டு முதல் நெமிலி பஞ்சாயத்துக்கு சொந்தமான அரசு நிலங்கள் என்றும்,

அந்த நிலங்களின் மீது மோசடியாக உரிமை கோரிய பல்வேறு நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை, இழப்பீடாக சுமார் 300 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையிடமிருந்து இழப்பீடு கோருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த நிலங்கள் 2018 ஆம் ஆண்டு சில நபர்களுக்கு மோசடியாக மாற்றப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி ஸ்ரீபெரும்புதூரில் வசிக்கும் ஒருவர் 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, அந்த நபருக்கான இழப்பீடு தொகையை நில எடுப்பு அலுவலகம் வழங்கியதால் வழக்கை வாபஸ் பெற மனுதாரர் நீதிமன்றத்தை அணுகினார்.

ஆனால் ​​நீதிபதி வி.பவானி சுப்பராயன், பிரமாணப் பத்திரத்தில் சில முரண்பாடுகளைக் கண்டறிந்து, கோரிக்கையை நிராகரித்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அறிவிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டது. இந்த அறிவிப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர், லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் என்ற பெயரில் சிலர் 2018 ஆம் ஆண்டு ஒரு சிலருக்கு நிலத்தை விற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்குள், நிலத்தை வாங்கியவர்கள் (நில உரிமையாளர்கள்) 2019 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து இழப்பீடு பெற்றுள்ளனர்.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஒ) கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், பதிவு ஆணையம், பரிசுப் பத்திரத்தை ரத்து செய்து, ஒரு சிலருக்கு நிலத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. நில உரிமையாளருக்கு சொத்தின் மீது உரிமை இருப்பதால், விற்பனை செய்வதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று பிடிஓ பதிவுத் துறைக்கு கூறியதாக தெரிகிறது.

ஆனால், தற்போது ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், பதிவுத் துறைக்கு அப்படி எந்தக் கடிதமும் கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் இந்த புகார் மனு மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விற்பனை பத்திரத்தை ரத்து செய்ய ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் ஆட்சியர், இப்பிரச்னையை ஆய்வு செய்து சிபிசிஐடி.,யிடம் புகார் அளிக்க ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ., சைலேந்திரன் கூறுகையில், காவல்துறை மற்றும் பதிவுத்துறையிடம் ஆவணங்கள் கேட்டுள்ளோம். அவை கிடைத்ததும், சிபிசிஐடியில் புகார் அளிக்கப்படும் என்றார். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், ஆவணங்களின் பதிவை ரத்து செய்த பிறகு, பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.