முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பெயர்களை எழுதும் போது தமிழிலேயே எழுத வேண்டும் என்று முன்பில் இருந்தே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலின் போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பம் எழுத ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து தமிழ் வளர்ச்சி இயக்குனரகம் சார்பாக செய்யப்பட்ட பரிந்துரையில், அரசு அலுவலகங்களில் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டுமென அரசாணை உள்ளது. இதை உடனே அலுவலகங்களில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டத்தின் ஒரு விதியாக இது உள்ள போதிலும் பல அரசு அலுவலர்கள் இதை கடைபிடிப்பது இல்லை. அதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களின் பெயர்களின் முன்னெழுத்துக்கள் தமிழில் எழுதப்படுவது இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அரசாணை 1978 மற்றும் 1998ல் இது தொடர்பாக வெளியிடப்பட்ட முந்தைய அரசாணைகளையும், 1997ல் வெளியிடப்பட்ட அரசாங்கக் கடிதத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பெயர்களை ஆவணங்களில் எழுதும் போது தமிழில் தான் எழுத வேண்டும். அதேபோல் இனிஷியல் எனப்படும் முதல் எழுத்தையும் தமிழில் தான் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அரசாணையில் அரசுத் துறைகளின் அனைத்து உத்தரவுகளிலும், பெயர்கள் மற்றும் முதலெழுத்துக்கள் குறிப்பிடப்படும் போதெல்லாம், அவை தமிழில் இருக்க வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் தங்கள் பெயர்களை தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களும் அரசு விண்ணப்பப் படிவங்களில் தமிழில் கையொப்பம் மற்றும் முதலெழுத்துகளை பதிவு செய்ய வேண்டும். இது குறித்து பொதுமக்களுக்கு சுவரொட்டிகள் ஒட்டுவதன் மூலம் அரசுத் துறைகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த புதிய அரசாணை வலியுறுத்தியுள்ளது.