உத்திரமேரூரில் உள்ள பழங்கால குழம்பேஸ்வரர் கோயில் புனரமைப்பின் போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என பல்வேறு வடிவங்களில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி. 1089) கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது.

சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயிலை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய கற்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்து, இதற்கான திருப்பணி பூஜை பாலாலயம் ஆகியவை டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை வருவாய்த்துறை அனுமதி இன்றி ஊர் மக்கள் துவங்கி உள்ளனர்.

இதற்குப் பிறகு கோயில் சிறிது சிறிதாக இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றியபோது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டை ஒன்று இருந்துள்ளது.

அதில், ஏராளமான தங்க ஆபரணங்கள், கவசங்கள் ஆகியவை இருந்துள்ளன. இதையடுத்து சிலர் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்வதற்காக வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். ஆனால், ஊர்மக்களும் விழாக் குழுவினரும் அந்தத் தங்கத்தை கொடுக்க மறுத்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 20015,20016″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

பின்னர் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் இருந்து நகைகளைக் கைப்பற்றி, அந்தத் தங்கத்தை எடைபோட்டபோது, சுமார் 565 கிராம் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் இருந்து தங்க நகைகள் சிலவற்றைப் பொதுமக்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மிகப் பழமையான இக்கோயிலை யார் அனுமதியும் பெறாமல் இடித்தது எப்படி என்பது குறித்தும் வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுதவிர இக்கோயிலில் சில அரிய தெய்வ விக்கிரகங்களை தற்போது காணவில்லை என்னும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கும் அம்மா சிமெண்ட் விலையை உயர்த்தியது தமிழக அரசு