சென்னையில் இன்று (01.11.2021) பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.35 ரூபாய்க்கும், டீசல் 34 காசுகள் அதிகரித்து 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை நாள்தோறும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்யலாம் என அறிவித்தது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு படுவேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த 170 நாட்களில் 70 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 20 பைசா, 30 பைசா என பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

இருப்பினும் ஒன்றிய அரசின் வரிக் கொள்ளையால் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து ஏழை, எளிய பொதுமக்களின் வாழ்வை சிதைத்து வருகிறது. சென்னையில் நேற்று (31.10.2021) பெட்ரோல் லிட்டர் 106.04 ரூபாய், டீசல் லிட்டர் 102.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (01.11.2021) பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.35 ரூபாய்க்கும், டீசல் 34 காசுகள் அதிகரித்து 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.