தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி வெளியிட்டார். அதில் சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடித்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை 1.1.2022 ஆம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2022 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன் தீப்சிங் பேடி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வெளியிட்டார்.

இதில் திமுக நிர்வாகி மதுகணேஷ், அதிமுக தரப்பில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, சரவணன், காங்கிரஸ் சார்பில் பொதுச்செயலாளர் தாமோதரன், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் நகலினை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மண்டல அலுவலகங்கள், 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது பெயர்கள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த விவரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம்-6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் சமர்ப்பிக்க வேண்டும்.

சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்த புதிய வசிப்பிடத்தை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8எ-ஐ பூர்த்தி செய்து அதற்கான ஆதார நகலினை இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் 3,750 வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 297 வாக்குச் சாவடிகளும், குறைந்த பட்சமாக எழும்பூர் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 19.3.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 மொத்த வாக்காளர்கள் இருந்தனர். நடைபெற்று முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் மொத்தம் 40 லட்சத்து 50 ஆயிரத்து 38 வாக்காளர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இதில் 19 லட்சத்து 92 ஆயிரத்து 198 பேர் ஆண்களும், 20 லட்சத்து 60 ஆயிரத்து 767 பேர் பெண்களும் அடங்குவார்கள். 1,073 மூன்றாம் பாலின வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் 10 ஆயிரத்து 621 ஆண் வாக்காளர்கள், 11,862 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 492 வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் 12,928 ஆண் வாக்காளர்கள், 12,568 பெண் வாக்காளர்கள், 19 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 25,515 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த வாக்காளர்களை கொண்ட துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 379 பேரும், அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியான வேளச்சேரியில் 3 லட்சத்து 15 ஆயிரத்து 502 பேரும் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.