ஐரோப்பா கல்வி சமூகம்

சூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் அதிகரித்தது.

தற்போது நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை 100 AH திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணிநேரம் வரை தொடா்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது.

இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளா்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனா். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்து விடும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இவா், தானாகவே இயங்கும் வகையில் அறிதிறன் மின்விசிறியைக் கண்டறிந்திருந்தாா். இதற்காக மாணவி வினிஷாவிற்கு கடந்த ஆண்டு, டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் இக்னைட் விருதும், சிறந்த பெண் கண்டுபிடிப்பாளா் பிரிவில் டாக்டா் பிரதீப் பி தேவனூா் கண்டுபிடிப்பாளா் விருதும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வினிஷாவின் சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்புக்கு ஸ்வீடனில் நடந்த Children’s Climate Prize போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், வினிஷாவுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதில் பட்டயம், பதக்கம், குறிப்பாக ஸ்வீடன் நாட்டின் பண மதிப்பில் 100,000 (சுமாா் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம்) வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கா் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் பகுதியில் இயங்குகிறது பிரபலமான எரிசக்தி நிறுவனமான டெல்ஜ் எனர்ஜி. இந்த நிறுவனத்தின், ‘குழந்தைகள் காலநிலை அறக்கட்டளை’ சார்பில், உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தை தெரியப்படுத்தவும், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மாற்றியமைக்கவும் தேவையான ஆலோசனை, திட்டங்களை கட்டுரைகளாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது.

அதில், சிறந்த கட்டுரை மற்றும் சிறந்த திட்டத்துக்கு 2016 முதல் பரிசுகள், சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது இந்நிறுவனம். இதில், 12 வயது முதல் 17 வயதுள்ளவர்கள், இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். முக்கியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காலநிலை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகள் இந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்து, சிறந்ததை தேர்வு செய்கிறார்கள்.

அதன்படி, இந்தியாவில் இரண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மகாராஷ்ட்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மற்றொருவர் தமிழகம் திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா என்பது குறிப்பிடதக்கது.

தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ரத்து செய்தால் கட்டணம் வாபஸ்- AICTE அதிரடி

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.