தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இடத்தை ரத்து செய்தால் அவர்கள் செலுத்தியுள்ள கட்டணங்கள் முழுவதும் திருப்பி அளிக்கப்பட வேண்டும் என தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது.

தொழில்நுட்ப கல்வி மாணவர் சேர்க்கை, கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு மேலாண்மை செய்து வருகிறது.

மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியில் சேர்ந்து அதன்பிறகு, இடத்தை ரத்து செய்கின்றனர். இவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திருப்பி அளிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தாக்கம் நாடெங்கும் உள்ளதால் தொழில்நுட்ப கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஒரு சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இடத்தை ரத்து செய்யக் கடைசி தேதி நவம்பர் 10 ஆக இருந்தது 30 நவம்பர் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் புதிய மாணவர் சேர்க்கைக்கான இறுதி தேதி 15 நவம்பர் என இருந்தது டிசம்பர் 5 என மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு கல்விக்கு நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி நவம்பர் 1 லிருந்து டிசம்பர் 1 ஆக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இடத்தை ரத்து செய்யும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்தியுள்ள அனைத்து கட்டணங்களும் திருப்பி அளிக்கப்பட வேண்டும். இதற்கான செய்முறை கட்டணமாக அதிகபட்சமாக ரூ.1000 பிடித்தம் செய்யலாம். அனைத்து மாநில அரசுகளும் இதன்படி செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை