அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் கடன் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். செயலி மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கடன் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது.

கடனை வசூலிக்கவும், சில நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது.

அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் குறித்து உடனடியாக போலீசாரிடம் பொது மக்கள் புகார் அளிக்கலாம். கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர், கடனை திருப்பி செலுத்தாததால், ஆன்லைன் ஆப் நிறுவனம், அவரின் நண்பர்கள் அனைவருக்கும் ‘கடனை செலுத்தாதவர்’ என குறுஞ்செய்தி அனுப்பியதால், அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கடன் கொடுத்து அவமானப்படுத்திய ஆன்லைன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை