பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யூடியூபில் நேரலை செய்தது, பெண்கள், சிறுவர் சிறுமிகளிடம் இழிவாகப் பேசி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களில் தேடப்பட்டுவந்த யூடியூபர் மதனை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் பப்ஜி போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன், ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூப் சேனலைப் பின்பற்றுவோர் அதிகமாகி, 7.8 லட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர்.

தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளார் பப்ஜி மதன். சென்னையில் பங்களா, சொகுசு கார், மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி பணம் என்று பப்ஜி மதன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் அவரது அத்துமீறல் அதிகரித்தது. யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மதனுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது உங்களால் முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசி இப்படித்தான் தொடர்வேன் என மிரட்டி உள்ளார்.

ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் கிரைம் பிரிவு காவல்துறையில் புகார்கள் குவிந்தன. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. இதுவரை மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த புகார்கள் அடிப்படையில் பெண்களை ஆபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவானார்.

இதனையடுத்து தலைமறைவான மதனை தேடிவந்த நிலையில், பப்ஜி மதனின் தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மதனின் மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும், மதனுக்கு உடைந்தையாக இருந்ததாக அவருடைய மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ‘தன்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. தனக்கு நிறைய ஆதரவு இருக்கிறது. முடிந்தால் கைது செய்து பாருங்கள்” என்று தொடர்ந்து சவால் விட்டு வந்த பப்ஜி மதனை தருமபுரியில் நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பப்ஜி மதனை செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது, “நான் என்ன பிரதமரா, என்னை ஏன் வீடியோ எடுக்கறீங்க” என கேட்ட மதனின் தலையில் போட்ட காவல் ஆய்வாளர், நீ அக்யூஸ்ட் என கூறி இழுத்து சென்றுள்ளார்.

பின்னர் பப்ஜி மதனை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரனை நடந்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைக்க உள்ளனர்.

மதனிடம் நடத்திய விசாரணையில் பப்ஜி விளையாட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு பணத்தை பிட்காயினாக மாற்றி முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து மதனின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து முடக்க சைபர் கிரைம் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் 18 வயதிற்கு கீழ் உள்ள மதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளனர். மதனை போல் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வரும் நபர்களையும் கண்காணித்து வருவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் பாபாவிற்கு 15 நாள் சிறை; மாணவிகள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்- சிபிசிஐடி