கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குனர் பல்ராம் பார்கவா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக, நோய் பாதிப்பு குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள 718 மாவட்டங்களில், 540 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. தற்போது இந்தியாவில் 4-ல் 3 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களும் இதில் அடங்கும்.

கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில், குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரங்களுக்கு ஊரடங்கில் எந்தவித தளர்வும் அறிவிக்கக் கூடாது. தொற்று பாதிப்பு சதவிகிதம் 10ல் இருந்து 5 ஆக குறைந்தால் நாம் கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்.

மேலும் தலைநகர் டெல்லியில் 35 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு 17 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் டெல்லியில் ஒருவேளை கட்டுப்பாடுகளை தளர்த்தினால் அது பேரழிவாக அமையும். கொரோனா பாசிட்டிவ் விகிதம் முற்றிலும் குறைந்த பிறகே தளர்வுகள் அறிவிக்கப்பட வேண்டும்” என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு மாட்டு சாணம் தெரபி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழும் அவலம்