டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

புதிய கல்விக் கொள்கையை நிறுவுவது தொடர்பாக தேசிய பல்கலைக்கழகங்கள் தற்போது முடிவு செய்து வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டில் (2022-23) புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் எழுத்தாளர் மகாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற படைப்பான திரௌபதியை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. ‘திரௌபதி’ கதை பழங்குடிப் பெண்களைப் பற்றியது. இது தவிர விளிம்புநிலை மக்களுக்கான எழுத்தாளர்களான சுகிர்தராணியின் ‘கைம்மாறு’ ,’என் உடல்’ ஆகிய படைப்புகளும் பாமாவின் ‘சங்கதி’ படைப்பும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவர்களின் படைப்புகள் ஆங்கிலத் துறை பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே தீடீரென நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின்னரே படைப்புகள் நீக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எழுத்தாளர் சுகிர்தாராணி கூறும்போது, “என்னுடைய படைப்பும் பாமாவின் படைப்பும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இந்த தாக்கம் அவர்களை அச்சப்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான் நீக்கியிருக்கிறார்கள். எனது படைப்புகள் நீக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை.

பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுகிறது. இதில் சாதிய பின்புலம் தான் இருக்கக்கூடும், ஒரு எழுத்தாளராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிய அரசு மதச்சார்பற்ற அரசு இல்லை, அது இந்துத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் அரசு.

இந்துத்துவம் இந்து சமயம் இரண்டுக்குமே பெண்களைப் பற்றிய ஒரு பார்வை உள்ளது. இதுதான் ஒன்றிய அரசின் பார்வையும். அதிலும் நானும் பாமாவும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரலாகத்தான் எங்களது படைப்புகளை முன்வைத்து வருகிறோம்.

எங்கள் படைப்புகள் தற்போது நீக்கப்பட்டது எங்கள் குரல் ஒடுக்கப்படுவதாகத்தான் பார்க்கிறோம். பெண்களின் குரல் வெளியே வரக்கூடாது அதிலும் குறிப்பாக விளிம்புநிலைப் பெண்களின் குரல் நசுக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கமாக நாங்கள் பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒன்றிய அரசிற்கு எதிராக கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

 

முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக ஒன்றிய அமைச்சரை கைது செய்த மாநில அரசு!