இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக் குழந்தைகளிடம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 3,62,727 பேர் பாதிக்கப்பட்டு, 4,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஏற்படலாம், அதைத் தடுக்க முடியாது என்றும், அப்போது சிறார்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பை தடுக்க கொரோனா தடுப்பூசிதான் ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த மே 01 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது ஒன்றிய அரசு. இருப்பினும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பல மாநிலங்களிலும் இன்னும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்குக் கோரிக்கை வைத்தது. மருத்துவ நிபுணர் குழு இந்த கோரிக்கையைப் பரிசீலித்தது.

பின்னர் மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த பரிசோதனையானது நல்ல உடல்நிலையில் உள்ள 525 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு நடத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள் டில்லி, பாட்னா நகரில் உள்ளஎ எய்ம்ஸ் மருத்துவமனைகள், நாக்பூர் மேட்ரினா மருத்துவ அறிவியல் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு குறைய 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ICMR