கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணைக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 904 ஏக்கரில் கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சிலர், இந்த கொடநாடு எஸ்டேட்டில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காவல்துறையினர் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மறுவிசாணையை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் சயானிடம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத்தும், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷும் சுமார் மூன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது மேல் விசாரணை நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 18 கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறுவிசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவினர், சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர், கலைவாணர் அரங்குக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கொடநாடு வழக்கு மறுவிசாரணை: பதற்றத்தில் போராட்டத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி!

இந்நிலையில், இந்த வழக்கின் சாட்சியான கோவையைச் சேர்ந்த ரவி என்பவர், கொடநாடு வழக்கில் மேல் விசாரணை செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சாட்சிகள் யாரிடமும் சொல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு மேல் விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதுகுறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் மறு விசாரணை நடத்த முடியாது. இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி மறு விசாரணை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரு குற்றவழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தவே காவல்துறை சார்பில் விசாரணையை விரிவுபடுத்துவதற்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நிராகரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடிதம் அளித்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. மனுதாரர் காவல்துறையின் சாட்சியல்ல. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன் நெருக்கமாக உள்ளவர்.

விரிவான விசாரணை முடிந்தவுடன், அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்படும். அது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, “ஒரு வழக்கில் எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். எனவே காவல்துறை விசாரிக்க எந்தவொரு தடையும் இல்லை. காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணைக்கு தடை இல்லை.

விசாரணை அறிக்கை தாக்கல் செய்தவுடன் அதுகுறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும். எனவே மனுதாரரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியிருப்பது எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

கொடநாடு வழக்கில் தொடரும் மர்மம்: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு தாக்கல்