ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பல்வேறு பாதுகாப்புப் படைகளின் பல முகாம்களைக் கொண்ட மிகவும் பாதுகாப்பான பகுதியில் காவல்துறை பேருந்து மீது நடத்திய தாக்குதலில் 2 காவல்துறையினர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள காவல்துறை முகாம் அருகே நேற்று (13.12.2021) மாலை காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாதாமிபாக்கில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பின் ஒரு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறும்போது, ஆயுதப் பிரிவின் 9வது பட்டாலியனின் காவல்துறை பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதில் 2 காவல்துறையினர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் உதவி காவல் ஆய்வாளர் என்றும் மற்றவர் கான்ஸ்டபிள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்கூட்டியில் வந்த மூன்று பயங்கரவாதிகள், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் Article 370 ரத்து செய்யப்பட்டு 28 மாதங்களுக்குப் பிறகும், ஒன்றிய பாஜக அரசு கூறியதுபோல் காஷ்மீருக்குள் நிலைமை சீரடையவில்லை. கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்தாண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல்களில் இதுவரை 19 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், பந்திப்பூரில் இரண்டு காவல்துறையினரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.