97% மதிப்பெண் பெற்றிருந்தும் இங்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என உக்ரைனில் பலியான மாணவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 7 நாட்களாக நடைபெறும் போரில் உக்ரைனின் கிழக்குப் பகுதியான கார்கிவ் நகரை பிடிக்கும் வகையில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியது.

ரஷ்யாவின் இந்த படையெடுப்பை எதிர்த்து உக்ரைனும் தொடர்ந்து போராடி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. குண்டு மழையில் இருந்து தப்பிக்க மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

பலர் உயிர் தப்பிக்க உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இதனால் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் சுமார் 14 லட்சம் பேர் வசிக்கும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் வெளிப்பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் முகாமிட்டு உள்ளனர்.

அங்கிருந்து கார்கிவ் நகருக்குள் ரஷ்ய ராணுவத்தினர் நுழைந்ததால் அவர்களுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் சண்டையிட்டனர். அப்போது கார்கிவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள எரிவாயு குழாயை ரஷ்ய படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்து இருக்கலாம் என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மருத்துவ மாணவரும் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து உக்ரைனில் படிக்கச் சென்றிருக்கும் தங்களது பிள்ளைகள் குறித்த கவலை இந்திய பெற்றோர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் தந்தை கூறுகையில், “தனது மகன் 97% மதிப்பெண் பெற்றிருந்தும் கர்நாடகாவில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் இதே படிப்புக்கு குறைவான செலவில் கற்றுத் தரப்படுகிறது” என வேதனை தெரிவித்திருந்தார்.

முன்னதாக, பிரதமர் மோடி இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.