கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு நாளையொட்டி நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் திமுக சார்பில் இன்று (7.08.2022) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அண்ணா சாலையிலுள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலை முதல் மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. இதற்காக, அண்ணா சாலை, வாலாஜா சாலை போன்றவற்றில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கலைஞரின் இல்லமான கோபாலபுரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்பி.க்கள் சென்று மரியாதை செலுத்தினர். மேலும் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.