ரூ.2 ஆயிரம் பெறும் 60 லட்சம் பயனாளிகளின் பட்டியலை தமிழக அரசு இணையத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் “
தேர்தலுக்கு இன்னும் நூறு நாள்கள்தான் உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருக்கிறது.
 
இந்நிலையில் அவசர அவசரமாக எந்தவிதமான புள்ளி விவரமும் இல்லாமல் 60 லட்சம் குடும்பங்களைத் தேர்வு செய்யும் பணியில் அதிமுக அரசும், கட்சியும் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
 
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் தமிழக அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே 28.32 லட்சம் குடும்பங்கள் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
 
அந்த எண்ணிக்கை திடீரென 60 லட்சமாக எப்படி உயர்ந்தது? பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 60 லட்சம் குடும்ப அட்டைகளின் விவரப்படி 30 சதவீத குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதன்படி 10-இல் ஒருவர் தான் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாக உறுதி செய்ய முடியும்.
 
மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடி. இதில் 11.28 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 
அதன்படி தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் 28 லட்சத்திலிருந்து 32 லட்சம் வரை தான் இருக்க முடியும் என்று உறுதி செய்யப்பட்ட புள்ளி விவரம் கூறுகிறது.
 
இந்நிலையில், ஏறத்தாழ இந்தத் திட்டத்தின் மூலம் 30 லட்சம் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ரூ.2 ஆயிரம் பெறும் பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டிருப்பதாக உறுதியான, ஆதாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்படும். இதனால் அறிவிக்கப்பட்டுள்ள 60 லட்சம் பயனாளிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிடுவதோடு, கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்