தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்காக தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான நல்லகண்ணு, வைகோ உள்ளிட்ட 13 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகள் ரத்து செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடியில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும்,

பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 14-5-2021 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை அரசு கவனமாகப் பரிசீலித்தது. ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 21-5-2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி,

மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர, 13 அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான 38 வழக்குகளைத் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டுள்ளார்.

திரு.ஆர்.நல்லகண்ணு, மாநில பொதுக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திரு.வைகோ, பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

திரு.கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

திரு.அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தற்போது மீன்வளத்துறை அமைச்சர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் (தெற்கு), திராவிட முன்னேற்றக் கழகம்

திரு. டி.டி.வி.தினகரன், துணைப் பொதுச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த், மாநில மகளிரணித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

திரு. எல்.கே.சுதீஷ், மாநில துணைச் செயலாளர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

திரு.பாலசிங், ஒன்றியச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

திரு.அழகு முத்துபாண்டியன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

திரு. ராஜா, மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

திரு.ஹென்றி தாமஸ், மாவட்டச் செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

திருமதி பூமயில், மாவட்டச் செயலாளர், இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்

திரு.ஆர்தர் மச்சோடா, துணைச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி” என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு HLL Biotech தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தில் திடீர் ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்