சிதம்பரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவரை, ஆசிரியர் சுப்பிரமணியம் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் சர்ச்சையானதை அடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் தற்போது கொரோனா பாதிப்பு 2 ஆம் அலை முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகளும் முடிவெடுத்து வருகின்றன.

அதன்படி தமிழ்நாட்டில் முதற்கட்டமாக தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதர வகுப்புகளுக்கு வரும் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

அதேநேரம் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு வேக்சின் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழலில், கடலூரில் தனது வகுப்பிற்கு வராத மாணவர்களை ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது.

இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 13.10.2021 அன்று மதியம் 12 ஆம் வகுப்பு இயற்பியல் படிக்கும் மாணவர்கள் சிலரை அந்தப் பள்ளியின் ஆசிரியர் சுப்பிரமணியன்,

தனது வகுப்புக்கு ஏன் வரவில்லை எனக் கேட்டு கோபத்தில் கையில் வைத்திருந்த தடியால் அடித்துள்ளார். மேலும், ஆத்திரம் தாங்காமல் கால்களாலும் எட்டி உதைத்துள்ளார். இதனை சக மாணவர்கள் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பகரிந்துள்ளனர்.

பள்ளி மாணவர்களை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கும் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து மாணவர்களைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.