அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Global Hunger Index எனப்படும் உலக பட்டினிக் குறியீடு (GHI) என்பது, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய நான்கு காரணிகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.

தற்போது 2021 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101-வது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டினி கொடூரம் மிக அதிகமாக உள்ள நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

கடந்தாண்டு வெளியான உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது. ஒரே ஆண்டில் 7 இடங்கள் சரிந்துள்ளதால், கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவை விட 15 நாடுகள் மட்டுமே உலக பட்டினிக் குறியீட்டில் மோசமான இடத்தைப் பிடித்துள்ளன. சோமாலியா, ஏமன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ ஜனநாயக குடியரசு. மடகாஸ்கர், லைபீரியா, ஹைட்டி, தைமூர் லெஸ்டி, சியாரா லியோன், மோசாம்பிக், காங்கோ, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியுள்ளன.

உலக அளவில் 116வது இடமான கடைசி இடத்தில் பட்டினியில் பின்தங்கிய நாடாக சோமாலியா உள்ளது. அண்டைநாடுகளான பாகிஸ்தான் 92-வது இடத்திலும் நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகியவை 76-வது இடத்திலும் உள்ளன. இந்த நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக பட்டினிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய பசி குறியீடு (GHI) தற்போதைய கணிப்பின்படி, 47 நாடுகள் 2030க்குள் குறைந்தபட்ச பசியைக் கூட பூர்த்தி செய்ய தவறிவிடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2030-ஆம் ஆண்டுக்குள் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா.,வின் இலக்கு எட்டப்படாது என்றும், இதற்கு பருவநிலை மாற்றம், உள்நாட்டுப் போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் ஆகியவை காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.