லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கீம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் கார் ஏற்றி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், 8 பேர் பலியாகினார்கள். மேலும் இச்சம்பவத்தை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பல எதிர்கட்சித் தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த சம்பவம் விஸ்வரூபமானதால் அவசர அவசரமாக ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ஒன்றிய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் நேற்று (13.10.2021) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

குடியரசுத் தலைவரிடம், ராகுல் காந்தி அளித்த மனுவில், “விவசாயிகள் படுகொலை குறித்து நீதிமன்ற குழுதான் விசாரிக்க வேண்டும். இரண்டு நீதிபதிகள் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். அப்போது தான் விசாரணை நியாயமாக நடக்கும்.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இந்த வழக்கில் தொடர்புடையதால், அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திற்கு செவி குடுத்து மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, “லக்கீம்பூர் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியிடம் நாங்கள் அனைத்து விவரங்களையும் கொடுத்து உள்ளோம். எங்களுக்கு 2 கோரிக்கைகள் உள்ளன.

தற்போதுள்ள நீதிபதியைக் கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், ஒன்றிய இணை மந்திரி பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும். அல்லது அவரை நீக்க வேண்டும். இப்படி நிகழ்ந்தால் தான் நீதி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.