உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா தீடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் தேதி கடந்த 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அங்கு வாக்குப்பதிவு 7 கட்டங்களாக பிப்ரவரி 10, 14, 20, 23, 27, மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவிக்கை ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21. 24 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 27 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இதேபோன்று ஒவ்வொரு கட்டங்களுக்கும் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. பரிசீலனைக்கு பின்னர் மனுக்களை திரும்பப் பெற 3 நாட்கள் அளிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 4 கட்சிகளிடையே 4 முனை போட்டி நிலவுகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பாஜகவின் யோகி ஆதித்யநாத் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பிரதமர் மோடி பலமுறை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று ஏராளமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணிக்கு பாஜக அரசு ஆயத்தமாகி வருகின்றது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் அமைச்சராக உள்ள சுவாமி பிரசாத் மவுரியா இன்று (11.1.2022) தீடீரென தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மவுரியாவுடன் மேலும் சில தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்துள்ளார். நேற்று கோவா மாநிலத்தில் பாஜக அமைச்சர் ஒருவர் கட்சி மாறிய நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைச்சர் கட்சி மாறியுள்ளது பாஜகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சுவாமி பிரசாத் மவுரியா கூறுகையில், “தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் வணிகர்களுக்கு எதிரான உத்தரப் பிரதேச அரசின் அணுகுமுறையால் யோகி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும் இடையிலான தேர்தலாக இருக்கும், இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.