முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலைவிட 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும். அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5ஆம் தேதிக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

இதனையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பெண் வக்கீல் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா திப்ரேவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பவானிபூர் தொகுதியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில், 57% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று (03.10.2021) வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 82,068 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் 25,680 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2896 வாக்குகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே ஒன்றிய பாஜக அரசு என்னை அதிகாரத்திலிருந்து அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. எப்படியும் என்னை தோற்கடித்து விட வேண்டும் என முயன்றது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் பாஜகவின் அனைத்து சதிகளையும் மக்கள் முறியடித்து விட்டனர். எங்களுக்காக வாக்களித்த பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்துக்கும் எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பவானிபூர் இடைத்தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் மம்தா பானர்ஜி அவர்களே. மேற்கு வங்க மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமனம்- முதல்வர் யோகி ஆதித்யநாத்