அரசியல் சுற்றுச்சூழல் தேசியம்

இயற்கை வளங்களை சூறையாடுகிறதா மோடி அரசின் புதிய EIA 2020…

இந்தியா முழுவதும் மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 (Environmental Impact Assessment-EIA 2020) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1996ல் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறை கடைசியாக 2006ல் திருத்தப்பட்டது. தற்போது இதில் மீண்டும் திருத்தம் செய்து புதிய EIA 2020 வரைவு அறிக்கை ஒன்றை பாஜக மோடி அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்திற்கு மக்களிடம் கருத்து கேட்பது தொடங்கி, திட்டத்தின் வெளிப்படைத்தன்மை, திட்டத்தின் பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிப்பது என்று பல விஷயங்களை இதில் தளர்த்தி இருக்கிறார்கள். இதற்காக அடுத்த மாதம் 11ம் தேதி வரை மக்கள் கருத்தை கேட்க உள்ளனர்.

EIA 2020 முதல் திருத்தமாக, இதன் வெளிப்படைத்தன்மை. இஐஏ மூலம் ஒரு தொழிற்சாலை திட்டத்தை “மூலோபாய திட்டம்” (strategic plan) என்று அறிவித்துவிட்டால், அந்த திட்டத்திற்கு எந்த அனுமதியும் தேவை இல்லை. அதாவது இது தேச பாதுகாப்பு தொடர்பானது. அதனால் இதை பற்றி மக்களிடம் தெரிவிக்க முடியாது. மக்களிடம் கருத்து கேட்காமலே, EIA அறிக்கையில் விவரங்களை தெரிவிக்காமலே ஒரு தொழிற்சாலையை தொடங்க முடியும். உதாரணமாக ஒரு எண்ணெய் எடுக்கும் திட்டத்தை மூலோபாய திட்டம் என்று கூறிவிட்டால், அதை பற்றி மக்களிடம் தெரிவிக்காமலே, ஒரு ஊரில் எண்ணெய் எடுக்க நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளிக்க முடியும்.

இரண்டாவதாக ஒரு மின்சார திட்டம் 25 மெகாவாட் மின் உற்பத்திக்கு குறைவாக செய்தால், அதற்கு EIA மூலம் மக்கள் அனுமதியை பெற தேவையில்லை. அதாவது ஒரு பெரிய திட்டத்தை சின்ன சின்ன திட்டங்களாக அறிவித்து, EIA அறிக்கை மற்றும் மக்களிடம் முறையான அனுமதி வாங்காமலே செயல்படுத்த முடியும்.

மூன்றாவதாக, தற்போதுள்ள EIA முறைப்படி ஒரு திட்டத்தின் அறிக்கையை சமர்பித்துவிட்டு, அதன்பின் அனுமதி கிடைத்ததால் தான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஆனால் திருத்தப்பட்ட EIA வரைவில், இனி வரும் நாட்களில் முதலில் திட்டத்தை தொடங்கிவிட்டு, அதன்பின் மத்திய அரசிடம் EIA சமர்ப்பிக்கலாம். அதை மத்திய அரசு ஆராய்ந்துவிட்டு குழு ஒன்றை உருவாக்கி, பொறுமையாக முடிவை எடுக்கும். மேலும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிக்கும்.

நான்காவது திருத்தமாக, பொதுவாக ஒரு தொழிற்சாலையை தொடங்கப்பட்ட பின் அதன் நிலைமை, செயல் திறன், கழிவு வெளியேற்றம் குறித்த விவரங்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியிட வேண்டும். ஆனால் இனி புதிய EIA திருத்தம் மூலம் ஒரு தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்பதை வருடத்திற்கு ஒருமுறை தெரிவித்தால் போதும். இது பாதுகாப்பு பிரச்சனைக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளது.

ஐந்தாவது திருத்தம் மிக முக்கியமான சர்ச்சைக்கு வழிவகுக்கிறது. EIA அறிக்கை சமர்பிக்காமலே 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில், மக்களிடம் கருத்து கேட்காமல் ஒரு தொழிற்சாலையை தொடங்க முடியும்.

மேலும் வாசிக்க: தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் போராடுவேன்; முதல்வர் அசோக் கெலாட் ஆவேசம்

இதற்கு சுற்றுச்சூழல் வல்லுனர்கள், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெற்காசிய அணைகள் அமைப்பு (South Asia Network on Dams) எனப்படும் சர்வதேச சுற்றுசூழல் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மூத்த தலைவர் அம்ருதா பிரதான் கூறுகையில், இந்த புதிய EIA வரைவில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்களின் உரிமை இதில் பறிக்கப்படுகிறது.பெரிய திட்டங்களை சிறிய திட்டங்களாக மாற்றி மக்களிடம் அனுமதி வாங்காமல் செயல்படுத்த இருக்கிறார்கள்.

இதனால் விளைநிலங்கள் மிக எளிதாக ஆக்கிரமிக்கப்படும். மக்கள் நிலங்களை இழக்க நேரிடும். மேற்கு தொடர்ச்சி மலை உட்பட பல்வேறு மலை தொடர்கள் மொத்தமாக ஆக்கிரமிக்கப்படும். மொத்தமாக இயற்கை வளங்களை சூறையாடும் பொருட்டு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு உடனே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை-2020 (EIA 2020) திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.