மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை; ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு தொடர்பாக 3 மாத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் பதில் அளித்த இந்திய மருத்துவ கவுன்சில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 % மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று (ஜூலை 27) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம்.

இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதத்தை ஏற்க முடியாது.

மத்திய அரசின் கல்வி நிலையங்கள் அல்லாத கல்வி நிலையங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எந்தவிதமான தடையும் இல்லை.

மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை.

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுத்து, 3 மாதத்தில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க: மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்..