திருவொற்றியூர் பகுதியில்  மாத்தூர் நிலத்தடி நீரை திருடிய லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
சென்னை மாதவரம் பால் பண்ணை, மஞ்சம்பாக்கம் மற்றும் மாத்தூர் பகுதிகளில் உள்ள மாந்தோப்புகளில் தனியார் சிலர் ராட்சத ஆழ்துளை குழாய் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, தனியார் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு நிலத்தடி நீரை திருடுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இந்தநிலையில், நேற்றிரவு 11 மணியளவில் மாத்தூர் அருகே ஒரு மாந்தோப்பில் ஒரு தனியார் லாரியில் நிலத்தடி நீர் திருடப்படுவதை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, அந்த லாரியை சிறைப்பிடித்துவிட்டு மாதவரம் தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
 
அப்போது லாரி உரிமையாளரும் ஓட்டுனரும் ‘இனிமேல் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக லாரியில் நிரப்ப மாட்டோம்’ என்று உறுதி அளித்தனர்.
 
இதையடுத்து அந்த லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக லாரிகளில் எடுப்பதை தடுக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய மாதவரம் தாசில்தார் முருகானந்தம், குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரி ராஜா ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
 
இக்குழுவினர் மாதவரம் வருவாய் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக எடுக்கும் இடங்களில் அதிரடி ஆய்வு செய்து, அங்குள்ள மின்மோட்டார் மற்றும் குழாய்களை பறிமுதல் செய்தனர்.
 
அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டித்து, பூட்டி சீல் வைத்தனர். அதன்பின்னர் வந்த குடிநீர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்காததால், மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனர்.