இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தற்போது இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (21.07.2022) எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில், திரௌபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரௌபதி முர்மு 50% வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

திரௌபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரௌபதி முர்மு 64% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36% வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன்மூலம் நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார். இதனையடுத்து திரௌபதி முர்முக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். மேலும், திரௌபதி முர்முஜியின் வாழ்க்கை, அவரது ஆரம்பக்கால போராட்டங்கள், அவரது சேவை மற்றும் அவரது முன்மாதிரியான வெற்றி ஆகியவை ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என்றும், அவர் நமது குடிமக்களுக்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நம்பிக்கைக் கதிராக உருவெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து வந்துள்ள நீங்கள், அரசியலமைப்பு சார் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.